nfte

Friday, 13 May 2022

கட்சி அரசியலால் சீரழியும் இந்திய தொழிற்சங்கங்கள் ?                             தொழிற்சங்கம் ஒரு அரசியல் கட்சியின் எடுபிடியாக மாறுவதால் தொழிலாளர் நலனுக்குத் தான் கேடு. இதற்கு பல உதாரணங்கள் உள்ளன. பிஎஸ்என்எல் நிறுவனத்திலிருந்தே துவங்குவோம். 


2000 செப்டம்பரில் அன்றைய மத்திய பா.ஜ.க. அரசு 

கார்ப்பரேட் நிறுவனமாக  BSNL உருமாறிய பின்பு DTS/ DTO அரசுத்துறைகளில் பணிபுரியும் ஊழியர்களுக்கு அரசின் ஓய்வூதியம் கிடைக்காது என அறிவித்ததால் NFTE தலைவர் குப்தா அரசின் பென்ஷன் தடையின்றி தொடரக் கோரி 06/09/2000 அன்று நாடு தழுவிய காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தை FNTO , BTEF ஆகிய சம்மேளனங்களுடன் ஒன்றிணைந்து துவங்கினார். போராட்டம் நடத்திய மூன்று சம்மேளனங்களில் NFTE மட்டுமே எந்த அரசியல் கட்சியையும் சாராமல் சுயேட்சையாக இயங்கியது.  FNTO காங்கிரஸ் கட்சியை சார்ந்தும்  BTEF பாரதீய ஜனதா கட்சியைச் சார்ந்தும் இயங்கின. இந்த வேலைநிறுத்தம் முதல்நாளை கடந்ததுமே BTEF பா. ஜ.க. வின் அரசியல் நிர்பந்தம் காரணமாக போராட்டத்திலிருந்து விலகிக் கொண்டது. பிரதமர் வாஜ்பாய் ஆட்சிக்கு எதிராக BMS அமைப்பின் ஒரு அங்கமான BTEF போராட பா.ஜ.க. எப்படி அனுமதிக்கும் ? லட்சக்கணக்கானவர்கள் அரசு ஊழியராக பணியில் சேர்ந்த பிறகு அரசின் ஒரு தவறான முடிவால் அவர்களது பென்ஷனை இழப்பது அந்த கட்சிக்கு ஒரு பெரிய பிரச்சனை அல்ல. மாறாக பா.ஜ.க. அரசுக்கு எதிராக எவரும் போராடக் கூடாது என்பதே அந்த கட்சிக்கு பிரதானம். ஊழியர் நலனைவிட கட்சி நலனே பிரதானம் என்றாகி விட்டது. அதாவது BTEF தொழிற்சங்கம் தொழிலாளர் நலனை காவு கொடுத்து விட்டு கட்சியின் நலனை பாதுகாத்தது . இதே கதை தான் 

INTUC, AITUC, CITU, LPF போன்ற காங்கிரஸ், கம்யூனிஸ்ட் , மார்க்சிஸ்ட், திமுக ஆகிய அரசியல் கட்சிகளைச் சார்ந்த தொழிற்சங்களிலும் . எனவே தான் தொழிற்சங்கங்கள் எந்த அரசியல் கட்சியை சார்ந்து செயல்படக் கூடாது. அரசியல் கட்சிகளின் அடிமையாக மாறி தொழிலாளரின் உரிமைகளை - நலன்களை பலிகொடுக்க கூடாது என நான் கருதுகிறேன் . 


இன்று ( 13/05/2022) காலையில் ‘ இந்து ‘ ( The Hindu) நாளிதழை வாசிக்கையில் அதில் கண்ட செய்தி தான் என்னை இவ்வாறு பதிவிட தூண்டியது. 

( இதனுடன் அச்செய்தியை இணைத்துள்ளேன் ) 

கேரளாவில் அரசின் போக்குவரத்து கழகமான Kerala State Road Transport Corporation ( KSRTC) ல் பணியாற்றும் ஊழியர்கள் கடந்த பல வாரங்களாக ஏப்ரல் மாத சம்பளம் கேட்டு போராடி வருகிறார்கள். மாதந்தோறும் சம்பளம் உரிய தேதியில் வழங்கிடக் கோருவது ஒன்றும் பாவமல்ல. ஆளும் மார்க்சிஸ்ட் அரசுக்கு எதிரானது அல்ல. ஆனால் தொழிலாளரின் மிக நியாயமான இந்த போராட்டத்திலிருந்து மார்க்சிஸ்ட் கட்சியின் சங்கமான CITU ஒதுங்கி நிற்கிறது. காரணம் ?

மார்க்சிஸ்ட் கட்சி தலைமையில் உள்ள மாநில அரசுக்கு எதிராக போராடுவது மாபாவம் என்ற மிகவும் தவறான அரசியல் எண்ணம் தான். இவ்வாறு ஒவ்வொரு சங்கமும் தான் சார்ந்த அரசியல்கட்சியின் அரசை எதிர்த்து போராடுவதை தவிர்த்தால் தொழிலாளர் நிலைமை என்னவாகும் ?

உலகத் தொழிலாளர்களே ஒன்றுபடுங்கள் என்ற கோஷம் உதட்டளவில் தானா ? 


முன்பு “ஒரு தொழிலுக்கு ஒரு தொழிற்சங்கம் “ என நீட்டி முழக்கிய கம்யூனிஸ்ட் சங்கங்கள் கூட இப்போது பாதை மாறி “ தொழிற்சங்கங்களின் ஒற்றுமையை “ போற்றிப் புகழ்ந்து 

பேசுவது பிழைப்பு வாதமல்லவா ?

No comments: