Thursday, 25 February 2021

போரூரில் கிளை மாநாடு :

 

                                    25/02/21 அன்று காஞ்சிபுரம் மாவட்டத்தில் NFTE-BSNL கிளைச் சங்கத்தின் மாநாடு போரூர் தொலைபேசி நிலைய வளாகத்தில் மூத்த தோழர் 

N.V. சோமசுந்தரம் அவர்களின் தலைமையில் நடைபெற்றது. காஞ்சிபுரம் மாவட்ட செயலாளர் சுந்தரசீலன் கொடியேற்றி வைத்து மாநாட்டை துவக்கினார். மாநிலச் செயலாளர் சி.கே.எம், செங்கற்பட்டு மாவட்ட செயலாளர் ஏகாம்பரம், வடசென்னை மாவட்டச் செயலாளர் சிற்றரசு, தென் பகுதி செயலாளர் சத்யா, காஞ்சிபுரம் மாவட்ட தலைவர் கோபால், தென் சென்னை மாவட்டச் செயலாளரும் தமிழ்நாடு NFTCL மாநிலத் தலைவர்

பாபு உள்ளிட்டோர் பங்கேற்றனர். தோழர்கள் , K. ஹரிகிருஷ்ணன்,.   G. குமரவேல்,  R. நந்தகுமார் ஆகியோர் முறையே தலைவர், செயலாளர், பொருளாளர் பொறுப்புகளுக்கு தேர்வு செய்யப்பட்டனர்.‌மொத்தமுள்ள ஊழியர்கள் 15 பேரில் 13 பேர்       ( 87 %) NFTE-BSNL சங்க உறுப்பினர்கள் என்பது பாராட்டுக்கு உரியது.‌எஞ்சிய இருவரையும் கூட தாமதமின்றி  நமது சங்கத்தில் இணைத்து 100/100 NFTE-BSNL கிளையாக போரூர் கிளையை மாற்றிட புதிய நிர்வாகிகளை தோழர் சி.கே.எம். கேட்டுக் கொண்டார்.‌ புதிய கிளைச் செயலாளர் குமரவேல் நன்றி கூறினார்.

வன்முறை ஒருபோதும் தீர்வாகாது !

 

சென்னை தொலைபேசி NFTE மாநிலச் சங்கத்தின் செயலாளராக நான் 1997 ல் பொறுப்பேற்று 24 ஆண்டுகள் உருண்டோடி விட்டன. இந்த காலத்தில் உதவாக்கரை சங்கத்திற்கு ஏழு பேர் மாநிலச் செயலாளர் பொறுப்பில் இருந்துள்ளனர். அனேகமாக அவர்கள் அனைவரும் என்னை கடுமையாக விமர்சனம் செய்தவர்கள் தான். ஒரு சிலர் விமர்சனத்தை தாண்டி தனிநபர் விமர்சனம்- அவதூறு / பொய்ப் பிரச்சாரத்தை - புளுகு மூட்டைகளை எனக்கு எதிராக அவரவர் சக்திக்கு ஏற்ப- திறமைக்கு ஏற்ப கட்டவிழ்த்து விட்டுள்ளனர். அது அவர்களின் கருத்து சுதந்திரம்- தொழிற்சங்க ஜனநாயக உரிமை என்ற அளவில் தான் நான் கருதினேன் . இப்போதும் அப்படித்தான். உதவாக்கரை சங்கத்தினரின் தரம் தாழ்ந்த பேச்சுக்களை நான் எப்போதும் பொருட்படுத்தியதில்லை. இப்போதும் அப்படித்தான். காய்த்த மரம் தானே கல்லடிப்படும் ? ஒரு சமயம் எனது கொடும்பாவியை புரசைவாக்கம் தலைமைப் பொதுமேலாளர் அலுவலகத்தில் வைத்து உதவாக்கரை சங்கத்தினர் எரித்து சவ அடக்கம் கூட செய்தனர். அத்தகைய ஈனச் செயலில் ஈடுபட்ட பலர் பின்னர் எனது தலைமையை ஏற்று NFTE சங்கத்தில் இணைந்து விட்டனர். இது வரலாறு.

எனவே தற்போது உதவாக்கரை சங்கத்தின் மாநிலச் செயலாளர் பொறுப்பில் இருக்கும் நபர் சிறுபிள்ளைத்தனமாக என்னைப் பற்றி அச்சங்கத்தின் அதிகாரபூர்வ இணையதளத்தில் - சமூக வலைத்தளங்களில் கொச்சையாக எழுதுவது குறித்து எனக்கு எந்த வருத்தமும் இல்லை. இப்படிப்பட்ட ஏச்சும் கேலியும் எனக்கு பழகிப்போன ஒன்று. சில ஆண்டுகளுக்கு முன்பு அனைத்து சங்க கூட்டமைப்பு சார்பில் இரண்டு நாள் நடந்த நாடு தழுவிய வேலைநிறுத்தத்தை CGM அலுவலகத்தில் நான் தலைமையேற்று வெற்றிகரமாக நடத்திக் கொண்டிருந்த போது எவரும் எதிர்ப்பாராத வகையில் அண்ணா தொழிற்சங்க தோழர் ஒருவர் கொடுவாள் கொண்டு என் மீது கொலைவெறி தாக்குதல் நடத்தியதும் வரலாறு. எனவே தான் தொழிற்சங்கத்தில் வன்முறை ஒருபோதும் தீர்வாகாது என்பது எனது உறுதியான நிலைப்பாடு.
உதவாக்கரை சங்கத்தின் மாநிலச் செயலாளர் என்னைப் பற்றி கேவலமாக நரகல் மொழியில் அச்சங்கத்தின் அதிகாரபூர்வ இணையதளத்தில் 23/02/21 அன்று எழுதியதை படித்து விட்டு கோபங் கொண்ட தோழர்கள் சிலர் இதற்காக அவரது வீட்டிற்கே சென்று அவரிடம் எதிர்ப்பு தெரிவித்ததுடன் நில்லாமல் அவரது குடும்பத்தினர் முன்னிலையில் வைத்து அவர் மீது தாக்குதல் நடத்தியதை நான் வன்மையாக கண்டிக்கிறேன். இது ஒரு மோசமான அணுகுமுறை என்பதில் சந்தேகமில்லை. கருத்து வேறுபாடுகளை கைக்கலப்பில் தீர்த்துக் கொள்ள சில தோழர்கள் முனைந்தது எனக்கு மிகுந்த மனவேதனையை அளித்தது. இதுபோன்ற இழிவான செயலில் இறங்குவோர் மீது NFTE மாநிலச் சங்கம் மிகக் கடுமையான நடவடிக்கையை எடுக்கும் என பகிரங்கமாக எச்சரிக்கிறேன்.‌ சக தொழிற்சங்க பொறுப்பாளர் மீது வன்முறை தாக்குதல் என்பதை NFTE மாநிலச் சங்கம் எப்போதும் ஏற்காது. என் மீது அவதூறு பிரச்சாரம் செய்வோருக்கு நமது ஊழியர்கள் நல்ல பதிலடியை நிச்சயமாக உரிய நேரத்தில் கொடுப்பார்கள். அவர்கள் எல்லாவற்றையும் கவனித்துக் கொண்டு தான் இருக்கிறார்கள்.
சென்னை தொலைபேசியில் உதவாக்கரை சங்கம் கழுதை தேய்ந்து கட்டெறும்பாகி வருவதால்
அச்சங்கத்தினருக்கு என் மீதும் -
NFTE-BSNL சங்கத்தின் மீதும் ஆத்திரம்- கோபம் இருப்பது இயற்கையே.‌ அச்சங்கத்தின் பல உறுப்பினர்கள் ( உதாரணத்திற்கு தோழியர்கள் சங்கீதா ( அண்ணா நகர்) , சுஜாதா ( ஆவடி) போன்றவர்கள்) என்னை தொலைபேசியில் தொடர்பு கொண்டு நமது NFTE- BSNL சங்கத்தில் இணைய நேரடியாக விருப்பம் தெரிவித்து வரும் சூழலில் உதவாக்கரை சங்கத்தின் மாநிலச் செயலாளருக்கு Blood Pressure அதிகரிப்பதும் இயற்கை தான். அதனால் அவர் சமநிலை பிறழ்ந்து உளறுவதற்கெல்லாம் அவரை அடிப்பது - தாக்குவது புத்தியுள்ள தோழர்கள் செய்யும் செயலாகாது. மலையைப் பார்த்து குரைக்கும் நாயிடம் மலை கோபங் கொள்ள இயலுமா ? அதனால் நமது தோழர்கள் அனைவருக்கும் எனது அன்பான வேண்டுகோள் இது தான். Ignore the idiot ! தயவுசெய்து முட்டாள் மீது தாக்குதல் நடத்தி முக்கியத்துவம் அளித்து விடாதீர்கள்.
சி.கே.எம்.
மாநிலச் செயலாளர்.
24/02/21