Friday, 20 November 2020

PRESS STATEMENT

 

மத்திய பொதுத்துறை நிறுவன ஊழியர்களுக்கு ஒன்பது மாதங்களுக்கு அகவிலைப்படியை ( Dearness allowance) முடக்கம் செய்யும் மத்திய அரசின் உத்தரவு சட்டவிரோதமானது.
மத்திய அரசு 2020 நவம்பர் 19 ல் வெளியிட்டுள்ள உத்தரவின்படி மத்திய பொதுத்துறை நிறுவன ஊழியர்களுக்கு 01-10-2020 முதல் 30-06-2021 முடிய ஒன்பது மாதங்களுக்கு அகவிலைப்படியை முடக்கம் செய்துள்ள அறிவிப்பு அடிப்படையில் சட்டவிரோதமானது. விலைவாசி உயர்வினால் ஊழியர்களின் ஊதியம் அரிக்கப்படாமல் பாதுகாப்பதற்காக ஏற்படுத்தப்பட்ட முறைமையே அகவிலைப்படி ( Dearness allowance) வழங்கும் ஏற்பாடு. நுகர்வோர் விலைவாசி குறியீட்டு எண் ( Consumer Price Index ) மூன்று மாதங்களுக்கு ஒரு முறை கணக்கிடப்பட்டு அதன் சராசரி ஏற்ற இறக்கங்களுக்கு ஏற்ப ஊழியர்களுக்கு வழங்கப்படுவதே
அகவிலைப்படி. இதனை தன்னிச்சையாக முடக்குவது ஊதிய முடக்கத்திற்கு ( Wage freeze) ஈடாகும். வேலியே பயிரை மேய்வது இது தான். நாட்டில் உள்ள உழைக்கும் மக்களின் உரிமைகளை பாதுகாக்க கடமைப்பட்டுள்ள மத்திய அரசே கோவிட் -19 பெருந் தொற்றை காரணம் காட்டி அகவிலைப்படியை ஒன்பது மாதங்களுக்கு முடக்குவதும் அதன் பின்னரும் அந்த ஒன்பது மாத இழப்பை ஊழியர்களுக்கு ஈடுகட்ட மறுப்பதும் தொழிலாளர் நலன்களுக்கு எதிரான செயலே. விலைவாசியை கட்டுப்படுத்தவோ - குறைத்திடவோ சுண்டு விரலை கூட அசைக்காத மத்திய அரசு தமது ஊழியர்களுக்கான அகவிலைப்படியை மட்டும் மறுப்பது அநியாயம்.
ஒருபுறம் பெரு முதலாளிகளின் பல லட்சம் கோடி ரூபாய் கடனை வராக் கடன் என்று வர்ணித்து தள்ளுபடி செய்வதில் தாராளம் காட்டி தயாள குணத்துடன் செயல்படும் நரேந்திர மோடி அரசு மறுபுறம் உழைக்கும் மக்களின் சட்டப்பூர்வமான உரிமைகளை பறிப்பதில் அலாதியான ஆர்வம் காட்டுவது மோடி அரசு யாருக்கான அரசு என்பதை வெட்ட வெளிச்சமாக்குகிறது.
உழைக்கும் தொழிலாளர்களின் நலனுக்கு எதிரான கிராக்கிப்படி முடக்கத்தை மத்திய அரசு தாமதமின்றி வாபஸ் பெற வேண்டும். இல்லையென்றால் சக்தி மிக்க போராட்டங்களை மத்திய அரசு சந்திக்க நேரிடும். நாட்டில் தொழிலமைதி நிச்சயமாக கெடும்.
சி.கே.மதிவாணன்
தேசிய மூத்த உதவித் தலைவர்
பிஎஸ்என்எல் தேசிய தொலைத்தொடர்பு ஊழியர் சம்மேளனம்.
9487621621
ckmbsnl@gmail.com
19/11/2020.

No comments: