Saturday, 21 November 2020

அபிமன்யுவின் புதுக் கரடி !பிஎஸ்என்எல் ஊழியரின் மூன்றாம் ஊதியமாற்றக் கோரிக்கையை நிறைவேற்றுவதில் படுமோசமாக தோற்றுப் போன உதவாக்கரை சங்கமான BSNLEU இப்போது புதிய புளுகுப் பிரச்சாரத்தை துவக்கி உள்ளது. எதிர்வரும் நவம்பர் 26 ல் மத்திய தொழிற்சங்கங்கள் அறைகூவிய ஒரு நாள் வேலைநிறுத்தத்திற்கான கோரிக்கையில் மத்திய தொழிற்சங்கங்கள் முன்வைக்காத பிஎஸ்என்எல் ஊழியரின் மூன்றாம் ஊதியமாற்றக் கோரிக்கையை    (Third Wage Revision ) அபிமன்யு முன்வைத்ததே ஒரு மோசடி ; ஊழியரை ஏமாற்ற நடத்தும் நாடகம் .‌ இப்போது அந்த நாடகத்தின் ஒரு காட்சியாக 20/11/2020 ல் RLC ( Central) உடன் நடைபெற்ற மத்தியஸ்த (Concillation) பேச்சு வார்த்தையில் பிஎஸ்என்எல் நிர்வாகத்தின் சார்பில் பங்கேற்ற திரு.பிரதீப் குமார், AGM ( SR)  "மூன்றாவது ஊதிய மாற்ற பேச்சுவார்த்தை உடனே துவக்கப்படும் " என்று உறுதியளித்ததாக அபிமன்யு புதிதாக புளுகுப் பிரச்சாரத்தை அவிழ்த்து விட்டுள்ளார். ஆனால் தொழிலாளர் நலத்துறை 20/11/2020 ல் நடந்த மத்தியஸ்த பேச்சு வார்த்தை குறித்து வெளியிட்டுள்ள அதன் அதிகாரபூர்வ குறிப்பில் பின்வருமாறு தான் குறிப்பிட்டுள்ளது.


" Representative of management stated that due to financial crunch demands of the union at this stage is not possible to fullfill " 


அதாவது நிறுவனத்தின் நிதி நெருக்கடி காரணமாக தொழிற்சங்கத்தின் கோரிக்கைகளை தற்போது ஏற்க இயலாது என்றே நிர்வாகத்தின் பிரதிநிதி கூறியதாக மினிட்ஸில் குறிப்பிடப்பட்டுள்ளது.  மூன்றாவது ஊதிய மாற்றத்திற்கான பேச்சு வார்த்தை உடனடியாக துவங்கும் என அபிமன்யு பொய்யான தகவலை திட்டமிட்டு உள்நோக்கத்துடன் நமது  ஊழியர்களிடம் பரப்புவது தனது கடந்தகால தவறுகளை- தோல்விகளை மூடிமறைக்கவே.


 எனினும் மூன்றாம் ஊதியமாற்றம் குறித்து அபிமன்யு கீழ்க்கண்ட வினாக்களுக்கு பதிலளிக்க கடமைப் பட்டுள்ளார். 


1) முதலாவது ஊதிய மாற்றம் 2002 - ல் அமலானபோது NFTE- BSNL அங்கீகரிக்கப்பட்ட சங்கமாக இருந்தது. BSNLEU சங்கம் அப்போது அங்கீகரிக்கப்பட்ட ஒரு சங்கமாக இல்லை.‌ முதல் ஊதிய உடன்பாட்டில் கையெழுத்திட்ட தோழர் O.P.குப்தா அடுத்த ஊதிய மாற்றம் ஐந்தாண்டு கழித்து 2007 ல் 

நடக்க வேண்டும் என்பதை உறுதிப்படுத்தினார். அதனால் தான் இரண்டாம் ஊதிய மாற்றம் 01/01/2007 ல் அமலாக்கம் செய்யப்பட்டது. ஆனால் அடுத்த ஊதிய உடன்பாட்டில் கையெழுத்திட்ட அப்போதைய அங்கீகரிக்கப்பட்ட ஒரே சங்கமான BSNLEU மூன்றாம் ஊதியமாற்றம் ஐந்தாண்டுக்கு பின்னர் 2012 ல் நடைபெற வேண்டும் என்பதை தலைவர் குப்தா போன்று உறுதிபடுத்த தவறியது. மாறாக சம்பந்தமே இல்லாமல் அதிகாரிகளுக்கு அடுத்த ஊதிய உயர்வு அளிக்கும் பொழுது ஊழியர்களுக்கும் வழங்க வேண்டும் என்று தவறுதலாக ஒப்புக் கொண்டது. 2004 முதல் 2013 முடிய BSNLEU மட்டுமே அங்கீகரிக்கப்பட்ட ஒரே சங்கமாக இருந்ததை இந்த நேரத்தில் நினைவில் கொள்ள வேண்டும். 


2)  BSNLEU சங்கம் 2012 ல் மூன்றாம் ஊதியமாற்றத்தைக் கோராமல் அமைதியாக இருந்து விட்டு பத்து வருடங்களுக்கு பிறகு 2017 ல் மட்டுமே (2007 -2017) மூன்றாவது ஊதிய மாற்றம் குறித்து நிர்வாகத்திடம் கோரிக்கையை எழுப்பியதே  அச்சங்கம் பத்தாண்டுக்கு ஒருமுறை ஊதிய மாற்றம் என்ற நிர்வாகத்தின் தவறான நிலைபாட்டினை‌ ஏற்றுக் கொண்டதை சந்தேகமின்றி நிரூபிக்கிறது ! 


3) பொதுத்துறை நிறுவன ஊழியர்களுக்கு மூன்றாம் ஊதிய மாற்றம் வழங்க நிர்வாகம்/ அரசு விதிக்கும் நிபந்தனை என்ன ? 

தொடர்ச்சியாக மூன்றாண்டுகள் இலாபத்தில் இயங்கும் பொதுத்துறை நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்களுக்கு மட்டுமே ஊதிய மாற்றம் அமலாக்கப்படும் என்பதே Third Pay Revision Committee விதித்த அந்த நிபந்தனை. ஆனால் இதற்கு முரண்பட்டு பிஎஸ்என்எல் நிறுவனத்தில் பணியாற்றும் ஆயிரக்கணக்கான     I T S அதிகாரிகளுக்கு 01/01/2016 ல் ஊதிய மாற்றம் நடந்தது .  2008 முதல் இன்று வரை பிஎஸ்என்எல் நிறுவனம் இலாபத்தில் இயங்கவில்லை. நட்டத்தில் தான் அது இயங்குகிறது. இருந்தும்கூட     I T S அதிகாரிகளுக்கு மட்டும் பிஎஸ்என்எல் நிர்வாகம் ஊதிய மாற்றத்தை நிபந்தனை ஏதுமின்றி அமலாக்கியது‌. இதனை உதவாக்கரை சங்கமான BSNLEU கைக்கட்டி வாய்ப் பொத்தி வேடிக்கை பார்த்தது. கேள்வி கேட்க தவறியது.


4) T S M ( Temporary Status Mazdoors) ஊழியர்களும் I T S அதிகாரிகள் போலவே பிஎஸ்என்எல் நிறுவனத்தின் ஊழியர்கள் அல்ல. எனவே அவர்களின் ஊதிய மாற்றம் மத்திய அரசு ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு வழங்கப்படும் போது தானாக  நடக்க வேண்டும். ஆனால் அந்த பாவப்பட்ட  அந்த T S M ஊழியர்களுக்கு ஜனவரி 2006 க்கு பின்னர் இதுவரை ஊதிய மாற்றம் செய்யப்படவில்லை. அதாவது கடந்த 14 ஆண்டுகளாக அவர்கள் ஊதிய உயர்வு இல்லாமல் வாடுகின்றனர். இந்த கடைநிலை ஊழியர்களுக்கு சட்டப்படி- நியாயப்படி கிடைத்திருக்க வேண்டிய ஊதிய மாற்றம் இவ்வளவு கால தாமதமாவதற்கு அபிமன்யு என்ன சமாதானம் சொல்லுவார் ? கூரை ஏறி கோழி பிடிக்க முடியாதவன் வானத்தை கீறி வைகுண்டத்தை காட்டுவேன் என்றானாம்.அவனைப் போன்று அபிமன்யு இப்போது நமது ஊழியர்களுக்கு மூன்றாவது ஊதிய மாற்றம் விரைவில் நடக்கும் என பித்தலாட்டம் செய்கிறார். ஏற்கனவே பல வகைகளில் நமது ஊழியர்களை‌ ஏமாற்றி கடந்த 16 ஆண்டுகளாக வஞ்சித்து வரும் BSNLEU சங்கம்


* கொடுபடா ஊதியமே போனஸ்  என்ற கோட்பாட்டை கைகழுவியது. 


* தேர்வின்றி அனைவருக்கும் பதவி      உயர்வு என்ற உறுதிமொழியை     காற்றில் பறக்க விட்டது. 


* நிர்வாக அலுவலகங்களில் ஐந்து   நாள் வேலைத்திட்டம் என்பதை   அது மறந்தே போனது. 


* No VRS என உச்சியில் நின்று   முழங்கி விட்டு மோடி அரசின்    அப்பட்டமான ஆட்குறைப்பு   திட்டத்தை  எதிர்க்க துணிவின்றி    மெளன விரதத்தில் அடங்கிப்   போனது. 


நமது ஊழியர்களை கடந்த 16 வருடங்களாக ஏமாற்றியே தொடர்ந்து அங்கீகார தேர்தலில் வெற்றிப் பெற்று BSNLEU 2004 முதல் 2020 வரை சாதித்தது என்ன ? எதுவுமே இல்லை என்பதே நிதர்சனமான உண்மை. இனியாவது அந்த சங்கத்தின் புளுகுணி பிரச்சாரத்தை நமது ஊழியர்கள் புரிந்து கொள்ள வேண்டுகிறேன். நன்றி.


சி.கே.மதிவாணன்

20-11-2020.

No comments: