Monday, 7 September 2020

மத்திய அரசுக்கு சொந்தமான பி.எஸ்.என்.எல். நிறுவனத்தை ஏமாற்றிவரும் முகேஷ் அம்பானியின் "ரிலையன்ஸ் ஜியோ" நிறுவனம் செலுத்த வேண்டிய பல நூறு கோடி ரூபாயை பிஎஸ்என்எல் வசூலித்திட உதவிடக்கோரி பிரதமரின் உடனடி நடவடிக்கையை வற்புறுத்தும் தேசிய தொலைத்தொடர்பு ஊழியர் சம்மேளனம் (பிஎஸ்என்எல்).

 

***************************************
தனியார் தொலைத் தொடர்பு நிறுவனமான' ரிலையன்ஸ் ஜியோ' தனது சேவைக்காக நாடுமுழுவதும் உள்ள பிஎஸ்என்எல் மொபைல் கோபுரங்களை பல ஆண்டுகளாக பயன்படுத்தி வருகிறது. இதற்காக அந்த தனியார் நிறுவனம் நாடெங்கிலும் உள்ள பிஎஸ்என்எல் தொலைத்தொடர்பு வட்டங்களுடன் ( Telecom Circles) தனியாக உடன்பாடு போட்டுள்ளது. துவக்கத்தில் குயுக்தியாக ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் ஒரு அலைவரிசையில் ( Frequency) ஒரேயொரு சர்க்யூட் ( Circuit) என ஒப்பந்தத்தை கையெழுத்திட்டு விட்டு அதற்கான வாடகை / கட்டணத்தை குறைவாக நிர்ணயித்துக் கொள்ளும். ஆனால் சில மாதங்களுக்கு பிறகு பிஎஸ்என்எல் நிறுவனத்திற்கு தெரிவிக்காமல்- ஒப்பந்தப்படி பிஎஸ்என்எல் நிறுவனத்தின் முன்அனுமதியும் பெறாமல் அதன் மொபைல் டவர்களில் கூடுதல் அன்டெனாக்களை ( Antenna) பொருத்தி கூடுதல் அலைவரிசைகளில் கூடுதல் சர்க்யூட்டுகளை ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் இயக்கி பயன்படுத்திக் கொள்ளும். இதற்கு முக்கிய காரணம் இதனை பிஎஸ்என்எல் நிறுவனத்திற்கு தெரிவித்தால் ஒப்பந்தப்படி கூடுதலாக ஒவ்வொரு அலைவரிசைக்கும் - ஒவ்வொரு புதிய சர்க்யூட்டுக்கும் 70% ஆதார கட்டணம் மாதந்தோறும் கூடுதலாக செலுத்த வேண்டும். ஏனெனில் ஒப்பந்தப்படி வாடகை கட்டணங்கள் ஒரு அலைவரிசையில் ஒரேயொரு சர்க்யூட் பயன்பாட்டுக்கு மட்டுமே நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த மோசடியை ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் இந்தியாவில் உள்ள அனைத்து பிஎஸ்என்எல் தொலைத்தொடர்பு வட்டங்களிலும் ஆண்டுக் கணக்கில் செய்து வருவதன் மூலம் பல ஆயிரம் கோடி ரூபாயை மிச்சப்படுத்தி உள்ளது. ஆனால் அரசுத் துறை நிறுவனமான பிஎஸ்என்எல் இந்த மோசடியால் பல ஆயிரம் கோடி ரூபாயை இழந்துள்ளது. கேரளா, தமிழ்நாடு போன்ற ஒரு சில மாநிலங்களில் உள்ள பிஎஸ்என்எல் உயரதிகாரிகள் விழிப்படைந்து சோதனை செய்ததால் இந்த மோசடி இப்போது அம்பலமாகி உள்ளது. தமிழ்நாடு தொலைத் தொடர்பு வட்டம் மட்டுமே இந்த மோசடிக்காக ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் ரூபாய் 81 கோடி நிலுவைத் தொகையை தங்களுக்கு செலுத்த கோரியுள்ளது. இந்தியா முழுவதும் உள்ள அனைத்து மாநிலங்களிலும் உள்ள பிஎஸ்என்எல் உயரதிகாரிகள் இனியாவது சுதாரித்துக் கொண்டு சோதனை செய்து பார்த்தால் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்தின் மோசடி பல ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் இருக்கும் என நம்பப்படுகிறது. இந்த மோசடி குறித்து விசாரணை நடத்தவும்- பிஎஸ்என்எல் நிறுவனத்தின் நஷ்டத்தை தனியார் நிறுவனத்திடம் இருந்து வசூலிக்க உதவவும் கோரி ஊழியர் சம்மேளனத்தின் ( NFTE-BSNL) சார்பில் இன்று (07/09/20) பிரதமர், தொலைத் தொடர்புத் துறைக்கான மத்திய அமைச்சர், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்டோருக்கு புகார்/ வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. உலகப் பணக்காரர்கள் பட்டியலில் ஐந்தாவது இடத்தில் இருக்கும்- இந்திய பணக்காரர்கள் பட்டியலில் முதலிடத்தில் இருக்கும் முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்தின் இத்தகைய மோசடியை தேசிய தொலைத்தொடர்பு ஊழியர் சம்மேளனத்தின் சார்பில் வன்மையாகக் கண்டிக்கிறோம்.
முன்னர் இதே ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் தனது மொபைல் ஃபோன் விற்பனையின் போது சரக்கு மற்றும் சேவை வரி ( GST) கட்டுவதை தவிர்க்க தனது ஃபோன்களை வாடிக்கையாளர்களுக்கு விற்பனை ( Sales) செய்யவில்லை; மாறாக அதற்காக வாடிக்கையாளர்களிடம் முன்பணம் ( Deposit) மட்டுமே பெறப்படுகிறது என்ற ஜகஜால தில்லுமுல்லு செய்து மத்திய அரசுக்கு GST மூலம் அந்த நிறுவனம் செலுத்த வேண்டிய பல ஆயிரம் கோடி ரூபாயை ஏமாற்றியதை எவரும் மறக்க இயலாது. வசதி உள்ளவர்கள்- பணம் படைத்தவர்கள் சட்டத்தின் இடுக்குகளில் புகுந்து- ஓட்டைகள் மூலம் தப்பி வரி ஏய்ப்பில் ஈடுபட்டு அபராதமோ - தண்டணையோ இன்றி சுகமாக வெளியேறும் அவலநிலை இந்திய நாட்டில் தொடர்வது வெட்கக்கேடு. கருப்புப் பணத்தை ஒழிப்பேன்- வரி ஏய்ப்பை அனுமதிக்க மாட்டேன் என வாய்ப் பந்தல் போடும் ஆட்சியாளர்கள் இருக்கும் வரையில் இது போன்ற பகல் கொள்ளைகள் தொடரவே செய்யும் என்பதே இன்றுள்ள சூழல். இதனை மாற்ற மக்கள் ஒன்றிணைந்து போராட முன்வரவேண்டும் என அழைக்கிறோம். நன்றி !
சி.கே. மதிவாணன்
தேசிய மூத்த உதவித் தலைவர்
தேசிய தொலைத்தொடர்பு ஊழியர் சம்மேளனம் ( பிஎஸ்என்எல்)
9444 71 2675
ckmbsnl@gmail.com.
07/09/2020.

No comments: