Saturday, 1 August 2020


BSNLEU தமிழ்நாடு மாநிலச் சங்கத்தின் செயலாளர் பெயரில் வேறு ஒருவர் வழக்கம் போல (?) தோழர் சி.கே.எம். எழுப்பிய பல்வேறு வினாக்களுக்கு விளக்கம் கூறுவதாக நினைத்துக் கொண்டு முழு பூசணிக்காயை ஒரு கவளம் சோற்றில் மறைக்க படாத பாடு பட்டுள்ளார். அண்ணனை காப்பாற்ற அந்த 'செல்ல'மான தம்பி 65 லட்சம் ரூபாய் வசூலானது உண்மை தான் என்று ஒப்புக்கொண்டுள்ளார். ஆனால் முழுக்க முழுக்க பொய்யாக அந்தந்த மாநிலங்களில் வசூலான நிதி அங்குள்ள ஒப்பந்த தொழிலாளர்களுக்கு நிவாரணமாக செலவழிக்கப் பட்டுவிட்டதாக சுத்தமாக கையை கழுவி விட்டார். அவர்கள் சங்கத்துக்குள்ளேயே இந்த வசூல் கொள்ளை குறித்து தாவா கொழுந்து விட்டு எரிகிறது. குறிப்பாக மதுரையில் உள்ள ஆனந்தன் என்ற BSNLEU தோழரின் பதிவு தரும் தகவல் " அடேங்கப்பா தொழிற்சங்க போர்வையில் இப்படி எல்லாம் கூட சுருட்ட முடியுமா ?" என நம்மை ஆச்சரியத்தில் ஆழ்த்துகிறது. ஆக மொத்தம் வசூலான 65 லட்சம் ரூபாய்க்கும் BSNLEU  அகில இந்திய சங்கத்திற்கும் எந்த சம்பந்தமும் இல்லை என செல்லத் தம்பி நழுவி விட்டார். எல்லா பணமும் ஏற்கனவே மாநிலங்களில் செலவழிக்கப் பட்டுவிட்டதாகவும் அந்த பதிலில் தெரிவிக்கப் பட்டுள்ளது. இதை நம்புகிறவர்கள் நம்பலாம். என்னைப் போல நம்பாதவர்கள் அந்த சங்கத் தலைமையிடம் கீழ்க்கண்ட ஐயப்பாடுகளுக்கு விளக்கம் கோரலாம். 

1)   தமிழ்நாடு மாநிலத்தில் வசூலான ஆறு லட்சம் ரூபாய் தமிழகத்தில் உள்ள எத்தனை ஒப்பந்த தொழிலாளர்களுக்கு எவ்வளவு தொகையை நிவாரணமாக செலவழித்தது என்ற கணக்கு குறைந்த பட்சம் BSNLEU தமிழ்நாடு மாநிலச் சங்க இணையதளத்தில் பகிரங்கமாக வெளியிட முடியுமா ? 

2)அந்தந்த மாநிலங்களில் வசூலான நிதியை சம்பந்தப்பட்ட மாநிலத்தின் சங்கங்களே நிவாரண உதவியாக செலவழித்து விட்டதாக கூறுவது மெய்யானால் சென்னை தொலைபேசி மாநில BSNLEU சங்கம் வசூலித்து நிவாரண உதவி செய்ய செலவழித்த 1.25 லட்சம் ரூபாய் ஏன் மத்திய சங்கம் வெளியிட்ட ரூபாய் 65 லட்சத்தில் கணக்கு காட்டப்படவில்லை ? 

BSNLEU சங்கத்தினரின் மாசுமருவற்ற நேர்மை (?) குறித்து நாடே அறியும். தலைவர் குப்தா புதுடெல்லியில் தனது சொந்த மனையில் ( நிலத்தில்) ஊழியர்களிடம் நன்கொடை திரட்டி எழுப்பிய கட்டிடம் தான் தாதா கோஷ் பவன். அபிமன்யூ வகையறாக்கள் NFTE சங்கத்தை விட்டு தாங்களே வெளியேறி CPM கட்சிக்கு என தனியாக ஒரு சங்கத்தை துவக்கி இருபதாண்டுகளுக்கு மேலான போதும் தாதா கோஷ் பவன் சொத்துக்காக நாக்கை தொங்கப் போட்டுக் கொண்டு அலைவது மகா கேவலம் அல்லவா ? இது தான் மார்க்சிஸ்ட் கொள்கையா ?  இத்தனைக்கும் அந்த சங்கம் பல கோடி ரூபாய் மதிப்பில் ஒரு புதிய கட்டிடம் டில்லியில் வைத்திருக்கிறது. இது தவிர இரண்டு கட்டிடங்களை பிஎஸ்என்எல் நிர்வாகம் மூலம் பெற்றுக் கொண்டது. என்றாலும் NFTE சங்கத்திற்கு டில்லியில் இருக்கும் ஒரே கட்டிடமான தாதா கோஷ் பவனில் அழிச்சாட்டியமாக வாடகை ஏதும் தராமல் இருபதாண்டுக்கும் மேலாக ஓசியில் தங்கியிருந்துக் கொண்டு இப்போது அந்த சொத்தை அபகரிக்க திட்டம் போட்டு திரியும் கூட்டம் தான் கூட்டுறவு சொசைட்டியில் ஊழல் - முறைகேடு என சதா சர்வகாலமும் ஊளையிடுகிறது.‌அதற்கு துணிவிருந்தால் சொசைட்டி உறுப்பினர்களை முறையான தேர்தல் மூலம் எதிர்க் கொள்ளட்டும். முடிந்தால் ஜனநாயக வழியில் கைப்பற்ற முயலட்டும். அது இந்த ஜென்மத்தில் நடக்காது என்பதால் தானே புதிய தேர்தல் நடத்த கோரிக்கை வைக்காமல் தனி அதிகாரியை நியமனம் செய்ய வேண்டும் என கோரிக்கை வைக்கிறார்கள். இயக்குனர் குழுவை கலைத்துவிடு என கதறுகிறார்கள். கூட்டுறவு சொசைட்டி சட்டப்படி அடுத்த இயக்குனர் குழு பொறுப்பு ஏற்கும் வரை முந்தைய இயக்குனர் குழுவே அன்றாட நிர்வாகத்தை நடத்தும் என்ற சாதாரண உண்மையைக் கூட தெரிந்து கொள்ளாமல் BSNLEU சங்கத்தினர் AUAB அமைப்பையும் தமிழ்நாட்டில் தங்களின் அரசியலுக்கு பயன்படுத்திக் கொள்ள முயல்வது வெட்கக்கேடு. 

 ஓராண்டுக்கும் மேலாக பிஎஸ்என்எல் நிர்வாகம் ஊழியர்களிடம் ‌பிடித்தம் செய்த கோடிக்கணக்கான ரூபாயை இன்னமும் முழுமையாக சொசைட்டிகளுக்கு இந்திய நாடெங்கும் ஒப்படைக்க மறுத்து வருவதால் அனேகமாக நாடு முழுவதிலும் கூட்டுறவு சொசைட்டிகள் தள்ளாட்டம் போடுகின்றன. இதற்காக சுண்டுவிரலைக் கூட அசைக்க முடியாத கையாலாகாத இந்த கூட்டம் உள்நோக்கத்துடன் நடத்தும் பொய்யான பிரச்சாரம் வழக்கம் போல நமது தோழர்களிடம் எடுபடப் போவது இல்லை. பிஎஸ்என்எல் நிறுவனத்தின் இன்றைய அவலநிலைக்கு காரணமான BSNLEU தனது தவறுகளை - மோசடிகளை மூடிமறைக்கவே அவ்வப்போது கூட்டுறவு சொசைட்டி பிரச்சினையை கிளப்பி ஊழியர்களை திசைதிருப்பும் செயலை செய்கிறது. அதன் முயற்சிகளை சென்னை தொலைபேசி மாநில NFTE-BSNL சங்கம் உறுதியாக முறியடிக்கும்.

சி.கே.மதிவாணன்
மாநிலச் செயலாளர்
NFTE-BSNL
சென்னை தொலைபேசி
01/08/2020.

No comments: