thanks

thanks
ckm thanks

Thursday, 21 March 2019

அனைத்து தோழர்களின் ஆதரவையும் ஒத்துழைப்பையும் மனதாரக் கோருகிறோம்! !

2000ம் செம்டம்பர் மாதம் நாம் பணிபுரிந்து வந்த DTSஐ( Department of Telecom Services) BSNL நிறுவனமாக மாற்றும் முடிவை தன்னிச்சையாக திணிக்க அன்றைய வாஜ்பாயி தலைமையிலான NDA அரசு அசுரத்தனமாக முயன்றபோது NFTE, FNTO சம்மேளனங்கள் தோழர்கள் O.P.குப்தா, வள்ளிநாயகம் ஆகியோர் தலைமையில் போராடி அரசு பென்சன், வேலை பாதுகாப்பு, BSNLன் நிதியாதாரத்தை எந்நாளும் காப்பது என்ற மிகவும் பயனுள்ள உடன்பாட்டை உருவாக்கியது. ஆனால் கடந்த 18 ஆண்டுகளாக மத்திய அரசு தான் கொடுத்த வாக்குறுதிகளை அப்பட்டமாக மீறியதால் இன்று BSNLன் நிதிநிலை மிகவும் மோசமாக, ஊழியர்க்கு சம்பளம்கூட கொடுக்க முடியாத நிலையில் உள்ளது.
அரசு எழுத்துபூர்வமாக கொடுத்த வாக்குறுதியை அப்பட்டமாக மீறியதை எதிர்த்தும் அந்த வாக்குறுதியை அமலாக்கக் கோரியும் எந்த சங்கமும் ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை எடுக்காத காரணத்தால், 14-3-2019 அன்று கூடிய NFTE BSNL சென்னை தொலைபேசி மாநில சங்கத்தின் விரிவடைந்த மாநில செயற்குழு, BSNLன்நிதி ஆதாரம் சீர்குலைய மத்திய அரசு மேற்கொண்ட நடவடிக்கைகளை விளக்கி டெல்லி உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசின் மீது உடனடியாக வழக்கு தொடுக்க ஏகமனதாக முடிவெடுத்ததன் அடிப்படையில் மாநிலச் செயலர் தோழர் CKM டெல்லி விரைந்து சென்று நான்கு நாட்கள் டெல்லி NFTE BSNL சங்க அலுவலகத்தில் தங்கி சிறந்த வழக்கறிஞர்களிடம் ஆலோசித்துவிட்டு 18-3-2019 அன்று இரவு சென்னை திரும்பினார்.
இதற்கிடையே, துரதிருஷ்டவசமாக தமிழ் மாநிலத்தைச் சார்ந்த சில தோழர்கள் குழப்பம் விளைவித்தே ஆக வேண்டும் என்ற வகையிலும் சென்னை தொலைபேசி மாநில சங்கத்திற்கும் அகில இந்திய தலைமைக்கும் பிளவு ஏற்படுத்தும் வகையிலும் செயலாற்றி வருகின்றனர்.
BSNLஐ காப்பதற்கான நமது போராட்டம் மத்திய அரசை எதிர்த்துதான். அதை தடுக்கவோ, நீர்த்துபோகச் செய்யவோ முயற்சிப்பவர்கள் மத்திய அரசின் ஏஜெண்டாகத்தான் இருப்பார்கள். உண்மையான தொழிற்சங்கவாதிகள் இவ்வாறு செயல்படமாட்டார்கள்.
நமது எதிர்பார்ப்பையும் மீறி நாடெங்கிலுமிருந்து ஊழியர்களும் அதிகாரிகளும் நமது செயலை உற்சாகமாக ஆதரித்தும் வெற்றிபெற மனதார வாழ்த்தியும் வருகின்றனர். கட்சி/ சங்க வித்தியாசங்களைத் தாண்டி எதிர்பாராத தரப்புகளிலிருந்தெல்லாம்கூட ஆதரவு வந்து குவிந்து கொண்டு இருக்கிறது.
ஆனால் ஒரு சிலர், தீர்ப்பு எப்படி வரும் என்பதை இப்பொழுதே ஆருடங்கூறி குழப்பத்தை உருவாக்க முயற்சிக்கின்றனர். இன்னும் சில முட்டாள்களோ, தோழர் CKM சுப்ரீம் கோர்ட்டில் தொடுக்கவுள்ள வழக்கின் காரணமாக 3rd PRC அமலாகாது என்று பிதற்றுகின்றனர். நமது வழக்கை நினைத்து அரசைவிட இந்த ஒரு சிலர்தான் அதிகமாக பயப்பிராந்தியில் உள்ளதுபோலத் தெரிகிறது.
சில தோழர்கள் இந்த வழக்கை நமது தலைமைச் சங்கம்தான் போடவேண்டும் என்றும் சென்னை மாநில சங்கத்திற்கு வழக்கு போட உரிமை இல்லை என்றும் கருத்து தெரிவிக்கின்றனர்.அவர்களுக்கு இதற்கு ஏற்கனவே முன்னுதாரணம் உள்ளதுதெரியவில்லை. சென்னை தொலைபேசி மாநில சங்கம் இதற்கு முன்பே 3 முறை மத்திய அரசுக்கு எதிராக வழக்கு தொடுத்தது.அப்போது NFTE BSNL பொதுச் செயலராக இருந்த தோழர் குப்தா அவர்கள் ஒரு முறைகூட அதை ஆட்சேபித்ததும் இல்லை.அது சரியல்ல என்று வாதிட்டு நமது முயற்சிக்கு தடைபோட்டதும் இல்லை.
அகில இந்திய செயற்குழுக் கூட்டத்தில் விவாதித்து முடிவெடுத்த பிறகுதான் வழக்கு தொடுக்க வேண்டும் என்றும் சிலர் கருத்து தெரிவிக்கின்றனர் அகில இந்திய சங்க கூட்டங்களில் உடன்பாட்டை அமலாக்க அகில இந்திய தலைமை இதுவரை கடந்த பல்லாண்டுகளில் விவாதிக்காதது ஏன் என்று யாராலும் விளக்க முடியாது. மேலும் நாம் உருவாக்கிய உடன்பாட்டை முழுமையாக அமலாக்க கோருவதுபற்றி மேலும் விவாதிக்க என்ன இருக்கிறது ? மத்திய சங்கம் வழக்கு தொடுப்பதை யாரும் தடுக்கவில்லையே ? மத்திய சங்கத் தலைமை இப்பிரச்னையில் கவனம் செலுத்தாத காரணத்தால்தான் நாம் பொறுப்பேற்று வழக்கு தொடுக்கவேண்டிய நிலை உருவாகி உள்ளது. மிகுந்த அறிவாற்றலோடும் தீர்க்கதரிசனத்தோடும் நமது தொழிற்சங்க பிதாமகன் உருவாக்கிய உடன்பாட்டை, அவர் பெற்றுக் கொடுத்த வாக்குறுதியை அமலாக்கக் நாம் கோருவதில் தவறு என்ன இருக்கமுடியும் ?
நமது தோழர்கள் அனைவரும் ஒன்றை புரிந்து கொள்ளவேண்டும். கடந்த பல்லாண்டுகளாக ஒரே அங்கீகாரச் சங்கமாகவும் முதன்மை அங்கீகாரச் சங்கமாகவும் இருக்கும் BSNLEU வேண்டுமென்றே இந்த உடன்பாட்டை அமலாக்க கோரவில்லை.அதற்கு காரணம் அதன் குற்ற உணர்வே. இந்த மகத்தான உடன்பாடு உருவாகக் காரணமாக இருந்த 2000, செப்டம்பர் 6-9ல் நடந்த வீரஞ்செறிந்த போராட்டத்தில் அவர்கள் பங்கேற்காதது மட்டுமல்ல அதற்கு எதிராக செயல்பட்டனர்.அந்த போராட்டத்தின் காரணமாக மத்திய அமைச்சர் குழு, NFTE, FNTO சம்மேளனத் தலைவர்கள் குப்தா, வள்ளிநாயகம் ஆகியோருடன் பேச்சு வார்த்தை நடத்தி கார்ப்பரேஷன் ஆனபின்னும் மத்திய அரசு பென்சன் தொடரும், வேலை பாதுகாப்பு உண்டு, எக்காரணத்தைக் கொண்டும் BSNL நலிவுற அனுமதிக்கமாட்டோம் என்ற எழுத்துபூர்வமான அரசின் முழு உத்திரவாதத்தை ( Sovereign guarantee) பெற்றோம். அதன் காரணமாகவே ஓய்வு பெற்றோர் தொடர்ந்து அரசு பென்சனைப் பெறுகின்றனர்.தொடர்ந்துபெற உள்ளனர். இந்த உடன்பாட்டை உருவாக்குவதில் BANLEUவிற்கு எந்த பங்கும் இல்லாததால், அந்த சங்கத்தின் தலைமை இந்த உடன்பாட்டை முழுமையாக அமலாக்க கோரவில்லை. இந்த உடன்பாடு முழுமையாக இதய சுத்தியோடு அமலாக்கப்பட்டிருந்தால், மாதாமாதம் சம்பளம் வருமா என்று காத்துக்கிடக்கின்ற அவலநிலை ஏற்பட்டிருக்காது.என்ன செய்ய?
இறுதியாக மீண்டும் ஒருமுறை நாம் மனதார வேண்டுவதெல்லாம்,நமது முயற்சிக்கு அனைவரும் ஒத்துழைப்பு தாருங்கள். ஆதரவுக்கரம் நீட்ட மனமில்லாவிட்டால் பரவாயில்லை.... உங்கள் சொந்த நலனுக்காக குழப்பத்தை உருவாக்கும் பிரச்சாரத்தில் ஈடுபடாதீர்கள். நமக்கு வாழ்வளிக்கும் BSNL நிறுவனம் பெரும் ஆபத்தில் உள்ளது. BSNL ஊழியர்களின் வருங்காலம் கேள்விக் குறியாக உள்ளது.
அதனை காத்திட இதயசுத்தியோடு நாம் எடுக்கும் பணிக்கு எதிராக சீர்குலைவு வேலைகளை தவிர்க்குமாறு அன்போடு கேட்டுக் கொள்கிறோம்.

Image result for thanks gifImage result for thanks gifImage result for thanks gif

No comments: