Wednesday, 7 November 2018

நவம்பர் புரட்சி --மாநிலச் செயலரின் கட்டுரை

ருஷ்ய புரட்சியை நம்மால் மறக்க முடியுமா ?
Image may contain: 4 people, people standing
பழைய காலண்டர் படி 1917 அக்டோபரில் தான் ருஷ்ய புரட்சியை மாவீரர் லெனின் தலைமை ஏற்று நிகழ்த்தினார். ஆனால் தற்போது புழக்கத்தில் உள்ள காலண்டர் படி நவம்பர்-7 ல் தான் ருஷ்ய புரட்சி நிகழ்ந்தது என வரலாறு பதிவு செய்துள்ளது.அதனால் தான் ருஷ்ய புரட்சிக்கு அக்டோபர் புரட்சி என்றும் பெயர்.நவம்பர் புரட்சி என்றும் பெயர். கம்யூனிச பிதாமகன் கார்ல் மார்க்ஸ் கூட தொழிலாளிவர்க்க புரட்சி முதலில் பிரிட்டனில் தான் நிகழும் என்று நம்பினார். ஏனெனில் பிரிட்டனில் தான் அப்போது தொழிற் புரட்சி ஏற்பட்டு பெரும் ஆலைகளும் பெருமளவில் தொழிலாளர்களும் இருந்தனர்.ருஷ்ய அந்த காலத்தில் ஒரு பின்தங்கிய- பழமையில் ஊறிய நாடாகவே இருந்தது.
லெனினின் அரசியல் பிரவேசத்திற்கு முன்னமே அந்நாட்டில் கம்யூனிச/சோஷியலிஸ்ட் கருத்துக்கள் வேர் விட்டிருந்தன.கட்சிகள் கூட செயல்பட்டு வந்தன.ஆனால் லெனினின் நுழைவுக்கு பின்னர் தான் கம்யூனிஸ்ட் சித்தாந்தம் வேகமாக பரவியது.இந்தியாவில் காந்தியடிகள் வருகைக்கு பிறகு காங்கிரஸ் கட்சி செயலூக்கம் பெற்றது போல் இதனை கருதலாம்.
லெனினின் அறிவாற்றல் அபாரமானது.அவரது திட்டமிடல், கட்சியை வெகு மக்களிடையே வேகமாக கொண்டு சேர்த்தது போன்ற சிறப்பு மிக்க திறமைகள்- ஆளுமைத்திறன் கம்யூனிஸ்ட் கட்சியின் வளர்ச்சிக்கு பேருதவி புரிந்தது. இந்தியாவில் அவர் போன்ற ஒரு தலைவர் இல்லையே என என்னை பல நாள் அவர் ஏங்க வைத்திருக்கிறார் . அவர் ருஷ்ய புரட்சியின் வெற்றிக்கு முக்கிய பங்களிப்பு செய்த பெருந் தலைவர். கட்சியின் அமைப்பு இலக்கணத்தை உருவாக்கியவர். ஆனால் புரட்சி வெற்றி பெற்ற சில ஆண்டுகளுக்குள் அவர் மறைந்து விட்டது ருஷ்ய புரட்சியின் திசையை மாற்றியது.ஒருகட்டத்தில் தடம்புரண்டது. ருஷ்ய புரட்சியின் ஆதர்சத்தால் இந்தியா உள்ளிட்ட பல மூன்றாம் உலக நாடுகளில் விடுதலை இயக்கங்கள் எழுச்சி பெற்றன. வெற்றியும் பெற்றன. உள்நாட்டில் புரட்சிகரமான மாற்றங்கள் நிகழ்ந்தன. விவசாயிகள், தொழிலாளர்கள், கைவினைஞர்கள் என சகல பகுதி மக்களும் நிம்மதியையும் மகிழ்ச்சியையும் அடைந்தனர். ஆனால் புரட்சிகர ஆட்சிக்கு எதிரான சக்திகள் கைக்கோர்த்து எதிர் புரட்சி போரில் இறங்கியதால் நான்காண்டுகள் லெனினின் ஆற்றலும் நேரமும் உள்நாட்டு போரில் வெற்றி பெற போராடுவதிலேயே கழிந்தது.
ருஷ்ய புரட்சி தோல்வியை சந்தித்து முடிந்திருக்கலாம். ஆனால் அது உண்டாக்கிய உலகலாவிய தாக்கங்கள் வரலாற்றில் எப்போதும் நிலைத்து நிற்கும்.மனிதகுலம் என்றும் நினைவில் வைத்து போன்ற வேண்டிய நிகழ்வு ருஷ்ய புரட்சி.


No comments: