Tuesday, 19 November 2019

ஏமாத்திபுட்டீக்களே‌ அபிமன்யு ?

ஒருவேளை நாம் திட்டமிட்டப்படி 2018 டிசம்பரில் காலவரையற்ற வேலைநிறுத்தத்தை துவங்கி நடத்தி இருந்தால் இந்த அவல நிலை ஏற்பட்டிருக்காது. தோழர் அபிமன்யு அப்போதைய அமைச்சர் மனோஜ் சின்ஹா அவர்களின் மிரட்டலுக்கு அஞ்சி AUAB தான் முன்வைத்த ஒரு கோரிக்கையைக் கூட அரசு ஏற்காத நிலையிலும் கால்வரையற்ற வேலைநிறுத்தத்தை காலவரையின்றி ஒத்திவைத்தது. இது தான் அரசுக்கு தொழிற்சங்க இயக்கத்தின் பலவீனத்தின் மீது மிகுந்த நம்பிக்கையை ஏற்படுத்தியது. அதற்கு பிறகு தான் 2019 பிப்ரவரி மாதம் முதல் ஊதியம் தாமதம் செய்யப்படுவது தொடர்கதையானது. இவ்வாறு அபிமன்யுவின் பலவீனத்தால் இன்று அரசு அதிரடி தாக்குதலை‌ தடையேதுமின்றி தொடர்கிறது. அதற்கு ஒரு தடை ஏற்படுத்தவே டில்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தள்ளோம்.

Saturday, 16 November 2019

மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் பதில் சொல்வாரா ?


அரசுக்கு முழுமையாக சொந்தமான பிஎஸ்என்எல் நிறுவனத்தை வேண்டும் என்றே முடமாக்கிவிட்டு - திட்டமிட்டு நட்டத்தில் வீழச்செய்து விட்டு மத்திய அரசு இப்போது அதையே காரணம் காட்டி நிறுவனத்தில் பணிபுரியும் பெரும்பாலான ஊழியர்கள் மற்றும் அதிகாரிகளுக்கு
" கல்தா" ( தினகரன் நாளிதழ் குறிப்பிட்டது போல) தரும் நோக்கில் VRS திட்டத்தை கவர்ச்சிகரமாக அறிவித்துள்ளது. பிஎஸ்என்எல் நிறுவனத்தின் இன்றைய நிலைக்கு காரணமாக ஆட்சியாளர்கள் கூறும் நொண்டிச் சாக்கு அதிக எண்ணிக்கையில் ஊழியர்கள் இருப்பதும் அவர்களுக்கான ஊதிய செலவே 80 சதவீத வருவாயை தீர்த்துவிடுவதையும் தான். இது முழுக்க முழுக்க பொய்யான வாதம்.
தனியார் நிறுவனமான Vodafone இதற்கு சாட்சி. அந்த நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியர்களின் மொத்த எண்ணிக்கை வெறும் பத்தாயிரம் பேர் மட்டுமே. இவர்களுக்கான சம்பள செலவுக்கு அந்த கம்பெனி தனது வருவாயில் செலவழிப்பது வெறும் இரண்டு சதவீதம் மட்டுமே. என்றாலும் அந்த நிறுவனம் தனது செயல்பாட்டை நிறுத்தி விட்டு மூட்டைக் கட்டிக் கொண்டு வெளியேறும் முனைப்பில் உள்ளது. காரணம் தொடர்ந்து ஏற்பட்ட நட்டம் தான். கடந்த ஆறு மாதங்களில் ஐந்தாயிரம் கோடி ரூபாய் நட்டம் ஏற்பட்டுவிட்டதாக அந்த நிறுவனம் அறிவித்துள்ளது. இதுவரை மொத்தத்தில் ஐம்பதாயிரம் கோடி ரூபாய் நட்டம் ஏற்பட்டு விட்டதாக அந்த நிறுவனம் கூறுகிறது.
தவிர MTNL நிறுவனத்தில் ஏற்கனவே இரண்டு தடவை VRS திட்டம் அறிவிக்கப்பட்டு பல்லாயிரக்கணக்கான ஊழியர்கள் வெளியே சென்றுவிட்ட பிறகும் அந்த நிறுவனம் தொடர்ந்து நட்டத்தில் தான் இயங்குகிறது. எனவே அதிக எண்ணிக்கையில் ஊழியர்கள் இருப்பது தான் பிஎஸ்என்எல் நிறுவனத்தின் நட்டத்திற்கு முக்கிய காரணம் என்பது ஜமுக்காளத்தில் வடிகட்டிய பொய். இப்போதைய கவர்ச்சிகரமான VRS திட்டத்தின் மூலம் 80000 பேர் வெளியே சென்றாலும் பிஎஸ்என்எல் நிறுவனம் இலாபத்தில் செயல்படும் என்பதற்கு எந்த உத்திரவாதமும் இல்லை. ஏனெனில் அரசின் அணுகுமுறை- கொள்கைகள் மாறாமல் டெலிகாம் அரங்கத்தின் இன்றைய படுமோசமான சூழல் ஒருபோதும் மாறவே மாறாது. குறிப்பாக பிஎஸ்என்எல் நிறுவனத்தின் நிலை மேலும் மோசமாகவே வாய்ப்பு உள்ளது. 1.5 லட்சம் ஊழியர்கள் செய்துவரும் பணிகளை வெறும் 50000 பேரால் சிறப்பாக தரமுடியும் என நம்புபவன் முட்டாள். பிறகு என்ன நடக்கும் ? புத்தாக்கத்திற்கு ( Revival) பதிலாக நல்லடக்கம் ( Burial) தான் நடக்கும்.
எனவே தான் அரசின் இந்த சதியை தடுத்திட- முறியடித்திட‌ சென்னை தொலைபேசி மாநிலச் சங்கம் டில்லி உயர்நீதிமன்றத்தை நாடியது. மூர்க்கத்தனமான மோடியரசை எதிர்த்து போராடி வெற்றிப் பெறும் சூழலில் எந்த தொழிற்சங்கமும் இன்றில்லை. இது நிதர்சனமான உண்மை. இல்லையெனில் அரசின் தன்னிச்சையான அறிவுப்புகளை‌ எதிர்க்காமல் மெளனம் சம்மதம் என மயான அமைதியில் அனைத்து தொழிற்சங்கங்களும் ஆழ்ந்திருக்க வாய்ப்பு இல்லை. எனவே வேறெந்த வழியும் இல்லை என்ற சூழலில் தான் நாம் நீதிமன்றத்தின் கதவுகளை தட்டியுள்ளோம். புழுதிவாறி தூற்றுபவர்கள் தூற்றட்டும். அரசை எதிர்த்து குரலெழுப்ப துணிவில்லாதவர்கள் குறைந்த பட்சம் எனக்கு எதிராக குரலெழுப்பி தங்களின் கையாலாகாத அவலத்தை மூடிமறைத்துக் கொள்ள முனையட்டும். வேறென்ன சொல்ல ?
தோழமை அன்புடன்
சி.கே.மதிவாணன்.
16/11/19.